காவியில் முளைக்கும் தமிழ்ஈழ ’சிவசேனை’

siva-senai-founder-at-sanatan-sanstha-foundation-programmeமனித சமூகத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், அதனது  காட்டுமிரரண்டித்தனமான நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒரு முற்போக்கு சக்தியாக பரிணமித்ததுதான் கடவுள், மதம் போன்ற உருவாக்கம். அவ்வாறு தோன்றிய (உருவாக்கப்பட்ட) கடவுள்-மதம்போன்ற கருத்துநிலையானது எவ்வித இனப்பாகுபாடுகளுமற்ற வகையில் மனிதசமூகத்தின் மீதான நலன்களுக்கும் அவர்களது பாதுகாப்பிற்குமான ஒரு கருவியாகவே தோற்றம் தந்தது. அறிவியல்-அதிகார வளர்ச்சிப்போக்கின் நிமித்தமாக கடவுள்-மதம் குறித்த ஒரே கடவுள், பல கடவுள், உருவவழிபாடு  போன்ற கோட்பாடுகளின் மோதல்களினால் பல்வேறு மதங்களின் தோற்றமும், அதை நிறுவனப்படுத்தும் போக்கும் நிலைபெற்றது.

இங்கே நாம் இதை நீட்டி நிமித்தி தொடங்க வேண்டியதற்கான தேவையும் நிர்ப்பந்தமும் எதனால்!

 இந்தியாவின் மஹராஷ்டிரா மாநிலத்தில் 1966ல் உருவாக்கப்பட்ட  தீவிர வலதுசாரியக் கருத்தியலைக்கொண்டது சிவசேனா எனும் ஒரு அரசியல் கட்சி.  இக்கட்சியானது அரசியலையும் தாண்டி இந்துமதத்தின் பாதுகாப்பு இயக்கமாகவும் சமூக நிறுவனங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகவும் நிலைபெற்றிருக்கின்றது. தற்போதைய இந்தியாவின் ஆளும்கட்சியான பாரதீயஜனதாகட்சியும், சிவசேனாவும் மிக நெருங்கிய ‘இரத்த உறவினர்களாகும்’. இந்த சிவசேனாவின் இரத்த உறவினரான பாரதீயஜனதா கட்சி உறுப்பினரான கிரித் சோமையா என்பவர் கடந்த விஜயதசமி அன்று இராவணன் உருவ பொம்மை எதிர்ப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில்  இந்துமதக் கருத்தியல் முரண்பாட்டு வெளிச்சத்தைக் கண்ணுற்ற அவரது இரத்த உறவினர்களான சிவசேனாவின் இந்துமத சீர்திருத்தப் படையினர் கிரித் சோமையாவை கொல்வதற்காக முனைந்தனர். அத்தருணத்தின் நிகழ்ந்த இரத்த அபிஷேகத்தில் ஒரு பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

 

இதே விஜயதசமி எனும் இந்துமதப் புனிதத்திருநாளில் இலங்கையிலும் இரத்த அபிஷேகத்திற்காக அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை “Making Eezham tamil ‘shiv Sena’ meaningful”        எனும் தலைப்பை சூடி  தமிழ்நெற் இணையத்தளம் ஒரு அறிமுகத்தையும் வழங்கியிருக்கிறது.

மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவரது  ஒளிவட்டமோ மிகப்பிரகாசமானதாம். பிற மதங்கள் அனைத்தையுமே குறுடாக்கும் சக்திமிக்கதாகவும் துலங்குகின்றதாம். எம்மிடம் இருந்தும்; தோல்வியுறச்செய்த அனைத்து ஆயுதங்களையும் மேவிய சக்திமிக்கதாக இவரது ‘சிவசேனை’ ஒளிவட்டம்  புனையப்பட்டு வகிறது. இதனையே ‘தமிழ்ஈழ சிவசேனா’ என தமிழ்நெற் இணையத் தளத்தினால் சச்சிதானந்தத்தின் முயற்சி அர்த்தப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இலங்கையில் இந்து மதத்தை பாதுகாப்பதற்கான ஒரு இயக்கமாக சிவசேனை எனும் மதஇயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றார். அதனது கோட்பாட்டு விளக்கமானது: இலங்கை இனவாத அரசாங்கமானது தனது மதமான பௌத்தத்தை காப்பதற்கான சக்திமிக்கதாக உள்ளது. இலங்கையில் இஸ்லாமியர்களின் மதபாதுகாப்பிற்காக அரபுநாடுகளின் செல்வம் இலங்கையில் சுரக்கின்றது. கிறிஸ்தவர்களின் மதபாதுகாப்பிற்காக ஐரோப்பியர்களின் செல்வமோ இலங்கையில் கரைபுரண்டோடுகிறது. ஆனால் எமது இந்து மதத்திற்கோ…..!

இவரது இந்த அவலத்தை கண்ணுற்ற இந்திய சிவசேனா இயக்கத்தின் தற்போதைய தலைவரான உத்தாவ தக்கரி அவர்கள் மறவன்புலவு சச்சிதானந்தத்தின்  துயர் அகற்றும்  உத்தரவாதத்தையும் அளித்துள்ளாரர்.

சிவசேனாவை, சிவசேனை ஆக்கியதால் மட்டும் அதுவேறு இதுவேறு என்பதல்ல. சிவசேனாவின்  இந்துமதசாதிய அடிப்படைவாதக் கருத்தியலை உற்றுநோக்கி வருபவர்கள் இவ்விரண்டுக்கும் இடையிலான உள்நோக்கத்தை நன்கு அறிவார்கள்.

இலங்கைவாழ் இந்துமத நம்பிக்கையுள்ளவர்களின் அவதானத்திற்கு :  “இந்துமதம் என்பது ஒருமதமே அல்ல அது ஒரு சட்டத்தொகுப்பு. மதம் என்றால் மனிதப்பாகுபாடுகளற்ற, அனைவரையும் பொதுவாகருதும் ஒரு அமைப்பாக இருக்கவேண்டும். ஆனால் இந்துமதத்தின் தோற்றமானது மனிதர்களுக்கிடையிலேயான பிரிவுகளை தொடர்ந்தும் பாதுகாப்பதை அடிப்படையாகக்கொண்டது. அதுவே சாதிய பாகுபாட்டிற்கும் காரணமாக இருந்திருக்கின்றது”. என அம்பேத்கர் அவர்கள் இந்துமதத்தின் தோற்றத்தின் கோட்பாட்டை மிகதுல்லியமாக ஆய்வுசெய்துள்ளார்.

இலங்கையில் பின்பற்றப்பட்டுவரும் இன்றைய இந்துமதத்தை பொருத்தவரையில்  அதன் கோட்பாட்டு பின்புலங்களை எமது சமூக வளர்ச்சி  சூழலுடனும் அணுகவேண்டியுள்ளது. சமூக-கலாசார மட்டத்திலும் இந்துக்கோவில் நுழைவுமட்டத்திலும் இன்றும் சில இறுக்கமான சாதிய பேணுகைகள் எமது சமூகத்தில் நிலவுகின்றது. இருப்பினும் இந்தியாவிலுள்ள  பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டுவரும் தீவிர இந்துமத அடிப்படைவாத கருத்தியல் என்பது இதுவரை தோன்றவில்லை. ஆறுமுகநாவலர் காலத்து இறுக்கமான மதத்திற்கும் சாதியத்திற்குமான தொடர்புகளில் உள்ள நெகிழ்வுத்தன்மையை தற்போது எம்மால் அவதானிக்கவும் முடிகிறது. ஆனால் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் சிவ சேனையும், இந்திய சிவ சேனாவுக்குமான தொடர்பு என்பது மிக ஆபத்தானது. ஆறமுகநாவலர் காலத்தை மிஞ்சிய சமூக பிளவுகளையும், மதஅடிப்படைவாத மோதல்களையும் ஏற்படுத்தும்.

சிங்கள தமிழ் இனவாத போராட்டத்தின் அழிவுகளை மிஞ்சிய கொடூரத்தை எமது சமூகம் எதிர்கொள்ளப் போகிறது.

தயவு செய்து ஆழம் அறிந்து காலை நுழையுங்கள். சிவசேனா என்பது என்ன: 1992 டிசம்பெர் 6ல் பாபர் மசூதியை இடித்து நாசமாக்கி இந்துமத புனிதத்தை நிலைநாட்டியவர்கள் இந்த சிவசேனா எனும் இந்துமத அடிப்படைவாதிகள். இதன்  விளைவாக அண்டை நாடான பங்களாதேசத்தில் வாழும் இந்துக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டு நாட்டைவிட்டு புகலிடம்தேடி ஒடவேண்டியவர்களானார்கள். இந்தியாவெங்கும் மதக்கலவரம் நிகழ்ந்தது. பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர்.

இந்து மதத்தின் புனித ஜீவனாக கருதப்படும் மாட்டின்  இறச்சியை சாப்பிடுபவர்கள் சிவசேனா தொண்டர்  படையினரால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றனர். மிக அண்மையில் நிகழ்ந்த கொடூரம் ஒன்று: கடந்த யூலை மாதம் 11ம் திகதி குஜராத் மாநிலத்திலுள்ள மோடா சமத்தியாலா எனும் கிராமத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்ற காரணத்தினால் சிவசேனா ஆதரவு இயக்கமான பசுபாதுகாப்பு இயக்கம் ஒன்றினால் நான்கு தலித் இளைஞர்கள் கட்டிவைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வாறு தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்பவர்களாக இந்த சிவசேனா இயக்கத்தினரே செயல்பட்டு வருகின்றனர்.

 

siva-senai-founder-at-sanatan-sanstha-foundation-programmeஇந்திய அரசுடனான ஆதரவிலும், அதனது பல்வேறு அரசியல் நலன்களுக்கும் சேவையாற்றவல்ல ஒரு நபராக மறவன்புலவ சச்சிதானந்தம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.  காவி உடை போர்த்தப்பட்டு, இராமர் படமும் கையளிக்கப்பட்டு, இந்துமதப் பாதுகாப்பு எனும் பெயரில் இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையிலான கலவரங்கள் நடைபெறப் போகிறது.

அதற்கான தமது  நியாயப்பாட்டையும் சச்சதிதானந்தம் வெளிப்படுத்திவருகின்றார். விஜயதசமி அன்று சிங்களவர்களும், முஸ்லிம்களும் அநுராதபுரத்திலுள்ள அம்மன் கோவிலில் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற ஒரு தகவலுடன் எதிர்காலத்தில் தமது இரத்த அபிஷேகங்களுக்கான நியாயப்பாட்டை தற்போதே மறைமுகமாக வெளிப்படுத்தியும் வருகின்றார்.

முன்பு ஒரு காலத்தில் எம்மீது ஆயுதத்தை திணித்து அனுப்பியது! இப்போது காவி உடையும் இராமர் படமும் திணிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அபாயச் சூழலை கண்டித்தும் இதை அம்பலப்படுத்தும்  முயற்சிகளில் பல்வேறு சமூகஜனநாய அமைப்புகளும், தனிநபர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான கண்டனங்கள் பரவலாக்கப்பட்டு, தொடர்ச்சியாக எமது எதிர்ப்பையும் விமர்சனங்களையும் முன்வைத்து செயல்படுவோம்.

 

இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி

 

 

Bookmark the permalink.

Comments are closed.