ஏன்!!! எதனால்!!!

-தேவதாசன்-

முகப்புத்தகத்திலும் மேலும் சில சமூக வலைத்தளங்களிலும் வந்த இச்செய்தி மிக வேதனையையும், எமது ‘சமூகத்தின்மீதான’ வெறுப்பும் கோபமும் தொடர்வதற்கே வழிகோலியது. காரணம் தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனுக்கு நடந்த ஒரு சமூகபுறக்கணிப்பாகவே  இதை கருதத்தூண்டியதால் . தேவரயாளி இந்துக்கல்லூரிக்கு எமது சமூகத்திலிருக்கும் ஒரு ‘அடையாளம்’ இதற்கும் காரணமாக இருக்குமோ எனும் சந்தேகம் எனக்கு இயல்பாகவே உறுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இருந்தாலும் இச்சமயத்தில் நான் யாழ்ப்பாணத்தில் நிற்பதால் இதன் விபரத்தை அறியும் வாய்ப்பும் ஆவலும் சாதகமாக இருந்தது. தேவரயாளி இந்துக்கல்லூரியில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனது ஓவியப் புலமை ‘களவடப்பட்டதான’ (நிர்வாகத் தவறு நிகழ்ந்ததாக நாகரீகமாகப் பொதுவெளியில் பேசப்பட்டாலும் எனது பார்வைக்கும் உணர்விற்கும் அது களவடப்பட்டதாகவே கருதத் தூண்டுகின்றது.)  செய்தியே அதுவாகும்.
எனவே சம்பந்தப்பட்ட மாணவனையும் பெற்றோரையும் நேரே சென்று சந்தித்தேன். தேவரயாளி இந்துக்கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான எழுத்தாளர் தெணியான் அவர்களையும் சந்தித்து உரையாடியபோதும் இதுசம்பந்தமான தகவல்களை மேலதிகமாகவும் பெற்றுக்கொண்டேன்.
தொடர்ச்சியாக பாடசாலைகளில் நடைபெற்றுவரும் ஓவியப் போட்டியில் தேவரயாளி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட மாணவனான, கனிஸ்டன் டானியல் வடமராட்சி கல்விவட்டார வலயத்தில் 3ம் இடத்தை முன்பு பெற்றிருந்தான். இந்தப் போட்டியில் பங்குபற்றிய முறையே;  ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் ஓவியங்கள் உலக உணவு வழங்கும் மையத்தால் நடாத்தப்பட்டுவரும் சர்வதேச ஓவியப் போட்டிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
சர்வதேச ஓவியப்போட்டியின் பெறுபேறுகள் 2016ம் ஆண்டு யூன் மாதம் வடமாகாண கல்வித் திணைக்களகத்தால் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களின் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனான கனிஸ்டன் டானியலின் ஓவியம்
நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக தேவரயாளி இந்துக்கல்லூரிக்கும் அறிவிக்கப்பட்டது. சர்வதேசரீதியான போட்டி என்பதாலும் அதில் நான்காவது இடம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் அறிந்த அம்மாணவனும் பெற்றோரும் தமக்குள் பெருமைப்பட்டுப் பூரித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து சர்வதேச ஓவியப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வைபவம் வடமாகாண கல்வித்திணைக்களத்தால் மேலதிகாரியான உதயகுமார் என்பவரின் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு நான்காவது இடத்தை பெற்றவனாக முன்பே அறிவிக்கப்பட்ட கனிஸ்டன் டானியலும் பெற்றோர், உறவினருடன் சென்று நிகழ்வில் ஐக்கியமாகித் திளைத்திருந்தான். வெற்றிபெற்றவர்களின் ஓவியங்கள் அனைத்தும் அழகாக சட்டகத்துள் நிரப்பப்பட்டு வடிவமைக்கப்பட்டு மேடையில் அலங்கரிப்பட்டிருந்தது.

வெற்றிபெற்றவர்கள் முறையே ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிறீதரன் சாருகன் எனும் மாணவனுக்கு ஓவியப்போட்டியின் முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாவும், கௌரவிப்பும் நடந்துகொண்டிருந்தது. சண்டிலிப்பாய இந்துக்கல்லூரியைச் சேர்ந்த அம்மாணவனின் வெற்றிக்காக வரைந்ததாக காட்சிப்படுத்தப்பட்ட ஓவியத்தை பார்த்த கனிஸ்டன் டானியல் அதிர்ந்து விட்டான். விழாமண்டபமே இடிந்து அவன் தலையில் வீழ்ந்தது. சிறீதரன் சாருகன் வரைந்ததாக அறிவிக்கப்பட்ட ஓவியம் நான் வரைந்துது, என்றான் டானியல். பெற்றோரும் திகைத்தனர். மண்டபத்திற்கு சென்று நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். சிறீதரன் சாருகனிடமும் விசாரித்தனர். சாருகன் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைதியாக நின்றார். சாருகனின் பெற்றோருடன் இது விடயமாக வாதாடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் ‘’ நீங்கள் அதை நிர்வாகத்திடம் கேடடுக்கொள்ளுங்கோ‘’ எனக்கூறி ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டனர். டானியல் பதைத்தான் பதறினான். எனது கையெழுத்தும் திகதியும் அந்த ஓவியத்திற்கு பின்னால் இருக்கிறது அதை பார்க்கலாம் என்றான். ஆனால் அந்த ஓவியம்  சட்டகத்துள் நுழைந்ததால் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுவிட்டதே. இருப்பினும் கனிஸ்டன் டானியலால் வரையப்பட்டதே அவ் ஓவியம் என்பதற்கு தேவரயாளி இந்துக்கல்லூரியன் ஆசிரியர்கள், மாணவர்கள் பலருக்கும் தெரிந்தே இருந்தது. அவ்வாறான சாட்சியங்களுடன் அணுகியபோதும் வடமாவட்ட கல்வி அதிகாரியான உதயகுமார் அவர்கள் இது சம்பந்தமாக அறிவதற்கோ விசாரிப்பதற்கோ மேலதிக முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. ஏன்!! எதற்கு!!!
மேற்படி தகவல்கள் அனைத்தும் கனிஸ்டன் டானியலின் பெற்றோர்களுடன் உரையாடியதில் கிடைத்தவை.  எனது கவனத்திற்கும் இவ்விடயம் வந்து வெளிப்படுவதால், இவர் இதை சாதிப்பிரச்சனையாக திரிபுபடுத்தும் நோக்கத்தில் எழுதுகிறார் என்று கருதக்கூடியர்களையும் நான் அறிவேன். அதை ஒரு ‘மூலையில்’ ஒதிக்கிக் கொள்வோம்.
ஆனால் இளைய தலைமுறை, சிறுவர்களின் மனநிலை இவர்களுடனான எதிர்கால சமூகம் என்ற தூரநோக்குச் சிந்தனை இருக்கவேண்டாமா? தான் வரையாத ஓவியம் ஒன்றிற்கு பரிசு வழங்கப்பட்டதும் அதை நான் பெற்றுக்கொண்டேனே எனும் குற்ற உணர்வில் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மாணவனின் மன உளைச்சல்கள் எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது  என்பதை பெற்றோர்களும் நிர்வாகமும் சிந்திக்கக்கூடாதா?  பாராட்டுகளுக்கும். வாழ்த்துக்களுக்கும் பணம் என்பது ஒரு பொருட்டே இல்லை. மனப்பக்குவத்திற்கான போதிய பலம் பெற்றிராத வயதுள்ள தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவன் கனிஸ்டன் டானியல் தனது திறமை, தனது சாதனை ‘களவாடப்பட்டதை’ நினைத்து வாழ்வதென்பது இலகுவானதா?
ஏன்!!! எதனால்!!!
Bookmark the permalink.

Comments are closed.