வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.


கடந்த திங்கட்கிழமை 06-03-2017 வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.
வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவர். இதை ஆவா குறூப், ‘ஈவா குறூப்’ எனப்படும்  வன்முறை குழுக்களின்
செயல்பாடாக வெளிப்படுத்தப்படும் வாய்ப்பிற்கும் இடமிருக்கிறது. இவ்வாள்வெட்டு சம்பவமானது இவ்வாறாக திரிபுபடுத்தப்பட்டு வருமாயின்! இது, அதுவல்ல!
சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் அரச உத்தியோகத்தவர்கள். இவர்களுக்கும் ஆவா குறூப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்!!  இல்லை என்றால் எதற்காக வாள்வெட்டிற்கு இலக்கானார்கள்!
மேற்படி இருவரும் மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் ‘உயர் சாதியினர்’ எனப்படுபவர்கள் வாழும் எல்லையில் காணிகள் வாங்கி வீடுகட்டும் முயற்சியில் ஈடுபட்டுவந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே வாள்வெட்டிற்கு அடிப்படைக்காரணமாக இருந்திருக்கிறது. சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவருடனும்…, நீங்களெல்லாம் எங்களுக்கு அருகாமையில், எங்களுக்கு நெருக்கமாக வாழமுடியாதே, ‘நீங்க வேற ஆக்களல்லவா’ என்பதான உட்பொருளில், மிக தயவாகவும் ‘கௌரவமாகவும்’  இவர்களுடன் ஆரம்பத்தில் பேசினார்கள், விவாதித்தார்கள், பின்பு மிரட்டினார்கள்… அனைத்தையும் அலட்சியப்படுத்தியவாறு சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் தமது வீடுகட்டும் பணிகளைத்  தொடந்து கொண்டிருக்கும்போது இனம்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் இருவரும்  மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதான செய்தியும், அதற்கான பின்னணி பற்றிய மேற்படி தகவல்களும் தோழர் யோகரட்ணத்திற்கு (“தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்”நூல் ஆசிரியர்) மிக நெருக்கமான உறவுடைய அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக கிடைக்கப்பெற்றது.
கடந்த வருட இறுதியில் நடந்த தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனது ஓவியம் மீதான விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இருப்பினும் அதுவிடயமாக எந்தவிதமான விசாரணைகளோ, உண்மையறியும் ஆவலோ எமது தரப்பு அரசியல் செயல்பாட்டோடு பொருந்தவில்லை. எமது தரப்பு அரசியல் செயல்பாடென்பது முதலில் நாம் எமக்கான ‘முறபோக்கான ஒரு தமிழ் தேசிய’ சர்வாதிகார அதிகாரமையத்தை நோக்கி செல்லவேண்டும் என்பதே!  அந்த அதிகார மையத்தை அடைந்துவிடால்…, சாதிய மோதல்களும் சமூக முரண்பாடுகள் என வேறு பல ‘தொல்லைகளும்’  பின்பு உதிர்ந்து காணாமல் போய்விடும்தானே!
Bookmark the permalink.

Comments are closed.