”சாதிதான் தேசியப்பிரச்சனை” ‘வல்லிசை’ நாவல் அறிமுகம்

சொல்லப்படாத, அதிகம் பேசப்படாத ஒரு வரலாற்றையும், அந்த வரலாற்றின் காலத்தை ஏந்திச்செல்லும் மாந்தர்களை புனைவு மொழியால் பின்னிப் பிணைத்துச் செல்லும் ஒரு பிரதியாகவும் அழகிய பெரியவனின் ‘வல்லிசை’ எனும் நாவலை வாசித்து சிலிர்த்தேன்.

தலித் இலக்கியம் என்பதற்கான வரையறை மீறல்களையும், ஊன்றப்பட்டு வரும் அடையாள அரசியல் மீதான மாற்று கருத்துருவாக்க முனைப்பிற்கான உரையாடல்களையும் ‘வல்லிசை’ யாக மனதில் அதிரச் செய்யும் நாவல்.

தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்பட்ட இயக்கங்கள், அமைப்புகள், ஆளுமைகள் என்பன நிலத்தடி நீர் ஊற்றாக தோண்ட தோண்ட புதிய சுவை நீராக சுரந்துகொண்டே இருக்கின்றது.

சமண இலக்கிய சான்றுகளூடாக சாதிய வரலாற்றுப் ‘புனைவை’ வேறொரு சிந்தனைத் தளர்த்திற்குள் நகர்த்தியிருப்பவர் அயோத்திதாசர் அவர்கள். அம்பெத்கரின் சமூக விடுதலை அமைப்பான ALL INDIA SCHEDULED CASTE FEDERATION எனும் அமைப்பு 1930களில் செயல்பட்டு வந்திருக்கின்றது. அம்பெத்கர் இயக்க வரலாற்று அத்தியாயங்களில் ஒன்று வட-தமிழகத்திலும் மூழ்கியும், மூடப்பட்டும் கிடந்திருக்கிறது. ஆழ்கடல் முத்து அது, மேலுழுந்திருக்கிறது. அதன் வாசல் திறந்து ‘வல்லிசை’ முழங்க அதன் வரலாற்று மாந்தர்களுக்கும் புனைவுப் போர்வை அணிந்து அழைத்து வருகிறார் அழகிய பெரியவன். அந்த அமைப்பின் வரலாற்று ஆதாரங்களையும், அந்த அமைப்பின் தலைவர்களின் உண்மையான பெயர்களையும், அக்காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்களையும் புனைவு மொழியோடு கலந்து முழங்குகிறது ‘வல்லிசை’.

2014ல் வெளிவந்த ‘அகநாழிகை’ எனும் சஞ்சிகையின் நேர்காணல் பகுதியில் ஸ்ராலின் ராஜாங்கத்தின் மூலமாக வட-தமிழகத்தில் அம்பேத்கரின் இயக்கம் செயல்பட்டு வந்த வரலாற்றை ஏற்கனவே நான் அறிந்திருந்தேன். அந்த அனுபவமும், புரிதலும் ‘வல்லிசை’யின் புனைவோடு நகர்வதற்கு மிக இதமாக இருந்தது. அம்பெத்கர் அமைப்பின் தலைவராக சிவராஜ் என்பவரும், மீனாம்பாள் எனும் அம்மையாரும் செயல்பட்ட வரலாற்றுத் தகவல்களை நாவலின் புனைவு பாத்திரங்களின் மொழிகளோடு கலந்து ‘உலுக்குகிறது ‘வல்லிசை.’

காலச்சுவட்டில் வெளிவந்த ஸ்ராலின் ராஜாங்கத்தின் விமர்சன-அறிமுகமே இந்நாவலை தேடிப்படிக்கும் ஆவலை தூண்டியது.
‘வல்லிசை’ நாவலின் புனைவோடு இணைக்கப்பட்ட அம்பெத்கர் இயக்கத்தின் வட-தமிழகத்தின் வரலாற்றையும், பாராம்பரியமாக இசைக்கப்பட்டு வந்த இசையை ஒரு சமூகத்திற்கு மட்டுமேயான இழிதொழிலாக சுமத்திய சாதிய பண்பாட்டை எதிர்கொள்ளும் அனுபவத்தையும், ஸ்ராலின் ராஜாங்கம் இவ்வாறு பதிவு செய்கின்றார். ‘’AISCFஇன் இத்தகைய வேலைத்திட்டங்களோ இழிதொழில் மறுப்பின் உள்ளுர் அனுபங்களோ நவீன தமிழக வரலாற்றில் சிறுகோடாகவும் பதிவு பண்ணப்படாதவை. உருப்பெற்றிருக்கும் இன்றைய தலித் வரலாறு என்னும் வகைமையினுள்ளும் கூட இதுவரை இவை இடம்பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் ஆதாரங்களின் போதாமை பிரதான காரணம். இப்போராட்டங்களின் தன்மை அப்படிப்பட்டவை. ஒரு பேரளிவிலான அமைப்பு, தொடர் பிரச்சாரம் செய்து திரட்சியோடும் அதிகார நோக்கத்தோடும் செய்த போராட்டங்கள் அல்ல இவை நுண் அளவிலானவை. தலித்தாகிய ஒருவரின் ஒவ்வொரு தருணமும் சாதி அமைப்பின் விளைவினால் ஆனவை என்ற முறையில் இயக்கமாக மாறாவிட்டாலும் இந்த இழிதொழில் மறுப்பை உள்ளூரளவில் ஒவ்வொரு தலித்தும் ஏதோவொரு வகையில் தன்னளவில் நிகழ்த்தியபடியே இருக்கிறான்.‘’ (காலச்சுவடு-நவம்பர்2017)

‘வல்லிசை’ நாவல் மீதான தனது அறிமுக-விமர்சனத்தின் இறுதியில்: ‘’இதுபோன்ற தருணங்களில் இதற்காகப் போராடியவர்கள் காலத்திற்கொவ்வாத சுமையாக பார்க்கப்படுகிறார்கள். இயலாமை உருவாக்கும் தனிமையின் இடத்தில் சமூகவாழ்வு தரும் நெருக்கடி அவர்களை அதுவரை தான் நம்பிய நம்பிக்கைகளுக்கு எதிரான சமரசத்தை நோக்கி விரட்டுகின்றன. அதனால்தான் தன் மகனின் தேர்தல் வெற்றிக்காக எதிரியிடம்போய் திருவேங்கடம் நிற்கும்போது நம்மால் அங்கு நிற்க முடியவில்லை.‘’ என தனக்கான புதிய ஒரு நம்பிக்கையுடன் ஸ்ராலின் ராஜாங்கம் ‘வல்லிசை’ நாயகனான திருவேங்கடத்தின் சூழலை புரிந்தும், அவர் மனம்  பதறுகிறது.

நம்பிக்கை சார்ந்த விடயங்களை எதிர்கொள்வதற்கும், இலட்சியம், கொள்கை கோட்பாடு சார்ந்த விடயங்களை எதிர்கொள்வதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. நம்பிக்கைகள் என்பது இயற்கையான மனிதப் பண்புகளால் சமூகத்தோடு இணைந்திருப்பது. அதனது மாற்றங்களுக்கு புறநிலையான சுயஅழுத்தங்களும் பிரதான காரணமாக இருந்து வருகிறது. இலட்சியங்களை அடைவதாயின் தகுந்த திட்டங்களை வகுத்து செயல்பட முடியும். இங்கே திருவேங்கடத்தின் நம்பிக்கையும், அவரது பால்ய நண்பனான சிவலிங்கத்தின் நம்பிக்கையும் வெவ்வேறானதாக உள்ளது. ஒரே சாதியை சேர்ந்த முரண்படும் இரண்டு நம்பிக்கைகளும், ஒடுக்கும் ஆதிக்கசாதியின் தயவில் நிற்கும் புறநிலை சூழலும் நாவலில் துல்லியமாக விபரிக்கப்படுகிறது.

ஆயினும், ஆதிக்க ஒடுக்குமுறைச் சாதியினரால் பொய்வழக்கு போடப்பட்டு தேடப்பட்டுவரும் திருவேங்கடத்தையும் அவரது மகன் சமநீதியரசையும் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பு வழங்குவதன் ஊடாக, இந்த நாவல் ‘சாதிய-சமூக-அதிகார’ ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் அனுகூலத்தை வேறொரு தளத்தில் சிந்திப்பதற்கான நம்பிக்கையை ஊன்றியிருக்கிறது.

வட-தமிழகத்தில் அம்பெத்கர் இயக்கத்தின் பணியும், அவர் முன்மொழிந்த சட்டமுமே ‘சாதிய அதிகார’ ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்திற்கான பாதுகாப்பு என்பதே இதன் பின்னால் உள்ள செய்தியாகும். உண்மையில் சட்டமும் நீதியும் , அரசியல் அதிகாரமும் பாரபட்சமின்றி நேர்மையாக மனிதநேயத்தோடு செயல்படுமேயாயின் சாதி ஒழிகிறதோ இல்லையோ, ‘சாதிய-சமூக-அதிகார’ ஒடுக்குமுறைகளை அரசியல் அதிகாரத்தின் துணையுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என்பதை ’வல்லிசை’யின் புனைவு மொழியூடயாக சிந்திக்கவும் வைக்கிறது.

நாவலின் சுருக்கம்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பான 1945ல் இருந்து 1990 பிற்பகுதிவரையான காலத்தை 320 பக்கங்களில் மடித்து வைத்திருக்கிறார் அழகிய பெரியவன். காலத்தின் மடிப்புகள் விரிய விரிய சந்ததிகளின் சிந்தனைகளும், நம்பிக்கைகளும் வெவ்வேறு திசைகளாகவும் பிரிகிறது.

அம்பெத்கர் இயக்கமான அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் அங்கத்தவர் இராவணேசன். தோல்பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தொழிற்சாலையின் இஸ்லாமிய உரிமையாளரான காதர்பாயின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவரது ஒரே மகன் திருவேங்கடம். பெரியபட்டி கிராமத்தில் ஆறாவது வரை படித்த மாணவனும் திருவேங்கடம் ஒருவனே. அவன் படிப்பிற்காக இராவணேசனின் முதலாளி பலவகையிலும் உதவுகின்றார்.

‘’அதிகாரி வீட்டுக்குள் போகும் தருணத்துக்காய் காத்திருந்த இருவரும், ஒடிப்போய் ஆசைதீர மிதிவண்டியைத் தொட்டுக் குதூகலித்தார்கள். திளைப்பின் நடுவே அவர்களுக்கு படீரென ஓர் அறை விழுந்தது.

‘’ஓடுங்கடா, பறப்பசங்களே‘’

கண்களை துருத்தியபடி கூச்சலிட்டார் அதிகாரி. அவர் வீட்டைப் பார்த்து அதே தொனியில் சொன்னார்.

‘’செம்புல ஜலம் கொண்டாடி. வண்டியெக் கழுவிடணும்.‘’(ப.11)

இவ்வாறான சாதிய ஒடுக்குமுறை அனுபவத்தை சிறுவயதிலிருந்தே நண்பர்களான திருவேங்கடமும், சிவலிங்கமும் சுமந்து வளர்கிறார்கள்.

‘’ என்ன மயிருக்கு துட்டுவாங்கிறா? கட நடத்துற? பேதம் பாக்கக் கூடாதுன்னு வெள்ளைக்காரன் சட்டம் போட்டிருக்கான். காலம் மாறின்னு வருது. நீங்க மாறமாட்டேன்றிங்களேடா. எங்கள பார்த்தா உனக்கு எப்பிடிடா தெரியுது? எம்புள்ள என்ன படிச்சிருக்கான்னு தெரியுமா? நானு யாரு எத்தினி ஊரு சுத்தியிருக்கேன்னு தெரியுமா?‘’

‘’கடைக்காரன் வெலவெலத்து நின்றான். சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலரும், வேலைக்காரர்களும் செய்வதறியாது பார்த்தனர். இராவணேசனின் வாயிலிருந்து சொற்கள் தெறித்து விழுந்தன. அப்பாவின் கோபத்தை நேரிலே பார்த்து உறைந்தான் திருவேங்கடம்….‘’(ப.22)

திருவேங்கடமோ தகப்பனின் சாதிய சமூக பண்பாட்டு ஒடுக்குமுறைகளைக்கு எதிரான போராட்ட அனுபவத்தை அருகிலிருந்து அவதானிப்பதோடு, தகப்பனின் பட்டியலின கூட்டமைப்பின் உறுப்பினர்களோடும் நெருக்கமாகும் சூழலோடு வளர்கின்றான். இராவணேசன் இறந்த பின்பு தகப்பனின் சமூதாய கோபத்தின் தீ திருவேங்கடத்தின் மீது பற்றிக்கொள்கின்றது. இழிவுபடுத்தும் தொழிலாக தம்மீது சுமத்தப்பட்ட பறை இசைக்கும் தொழிலையும், செத்த மாடுகளை அகற்றுவதையும் மேற்கொள்க்கூடாது என பிரச்சாரம் செய்து வருகின்றான் திருவேங்கடம். நண்பன் சிவலிங்கமோ இதற்கு மாறாக ஆதிக்க சாதியின் சமூக ஒழுங்குகளை மீறமுடியாத சூழலில் வளர்கிறான்.

உலுக்கும் ‘வல்லிசை’யிலும், இயல்பாகவே சுரக்கும் பதின்ம வயதின் ஊற்றில் இரு நண்பர்களும் நனைவதற்கென குப்பியும், மங்காவும். அவர்களையே திருமணம் செய்கின்றனர்

பட்டியிலின கூட்டமைப்பின் தலைவரான சிவமலையிடம் திருவேங்கடம் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்:

‘’நான் கேக்கவந்தது அது இல்லீங்கையா. சுதந்திரம் வந்தா சாதிக்கொடுமையெல்லாம் ஒழிஞ்சிடுமில்லையா? ஒரே ஒரு சட்டம் போட்டுட்டாப் போதுமில்ல?‘’

சிவமலை திருவேங்கடத்தையே உற்றுப்பார்த்தார்.

‘’ராத்திரிக்கப் பேசுறதுக்கு நல்ல தலைப்பத் தந்திட்ட! யாருக்கு சுதந்திரம்? இதுதான் ராத்திரி பேசப்போறது!‘’

அவரே தொடர்ந்தார்.

‘’ஒரே சட்டத்துல சாதிய ஒழிச்சிட முடியுமான்னு தெரியல. அது புனிதப்படுத்தப்பட்ட அசிங்கம். ஒரு சுரண்டல்முறை. தனக்குக் கீழே இருக்கிறவனோட உழைப்பை, உடைமையை, சுயமரியாதையைச் சுரண்டுவது. தனக்குக் கீழே ஒரு அடிமை இருக்கிறத யாருமே விரும்புவாங்கதானே? இந்த ஆண்டை அதிகாரத்தை இழந்திடக் கூடாதுன்னுதான் இத மதத்தோடவும், பிறப்போடவும் இணைச்சிருக்கான். இது ஒழிக்கப்படணும். ஆனா இங்க போராடுற தலைவர்களுக்குச் சுதந்திர இந்தியாவைப் பற்றிய உறுதியான எந்தக் கருத்துக்களும் இல்ல. சிலர் இதை இந்து நாடாக்கணும்னு நெனைக்கிறாங்க. பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்க்கிறாங்க. காந்தியாரோ பழமையைப் போற்றுறார். அதுல சாதியும் அடக்கம். கல்வியின்மை, வறுமை, சாதி, பெண்நிலை, மருத்துவம் எதைப் பற்றியும் தெளிவான பார்வையில்லை. இவங்க நினைப்புத்தான் என்ன? சுதந்திரம் வந்திட்டா எல்லாம் சரியாயிடும். இது விபரீதமானதொரு கற்பனை. இந்தத் தருணத்துல அம்பெத்கர் கிட்டயும், ஈ.வெ.ரா கிட்டயும் மட்டுமந்தான் இதுங்களைப் பற்றிய சில தெளிவான திட்டங்கள் இருக்கு. சாதிதான் தேசியப்பிரச்சனை. ஆனா அதைப்பற்றி இவங்க ரெண்டுபேரைத் தவிர யாருமே பேசலியே?‘’ (ப.111)

இவ்வாறான கருத்து மோதல்களோடும், சிந்தனையோடும், நம்பிக்கையோடும் வளரும் திருவேங்கடமும் அவனது இலட்சியமும் காலச் சுழிக்குள் மூழ்கிறது. திருவேங்கடத்தின் பிள்ளைகளோ நவீன நாகரீக வாழ்வோடு பிணைக்கப்படுகின்றனர். நண்பன் சிவலிங்கமோ எம்.ஜி.ஆர் ரசிகனாகவும் அவரது கட்சியிலும் இணைகின்றான்.

ஆதிக்கசாதியினரே பஞ்சாயத்துத் தேர்தல்களில் பங்குபற்றி வந்த நிலையானது இடஒதுக்கீட்டு சலுகை காரணமாக தலித்துக்களும் தேர்தலில் போட்டியிடும் காலத்தில் நாவல் நிறைவு பெற இருக்கிறது. தனது மகன் நீதியரசை எதிர்த்து போட்டியிடுபராக நண்பன் சிவலிங்கத்தின் மகன் நீலமேகம் இருப்பதை அறிகிறார். திருவேங்கடத்தின் மனைவியும் மகனின் தேர்தலுக்கு ஆதாரவா தேர்தல் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறார். பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவந்த ஆதிக்கசாதியைச் சேர்ந்த தீர்த்தமலை என்பவரிடம் சென்று:

’உங்களப்பார்த்து பேசலாம்னு வந்தேன். எம்பையன் பஞ்சாயத்து தலைவருக்கு தேர்தல்ல நிக்கிறான். நீங்கெல்லாம் அவனை ஆதரிக்கணும்.‘’

‘’போய் நிக்கச்சொல்லு.‘’

திருவேங்கடம் தயங்கினார்.

‘’பழைசையெல்லாம் மனசுல வச்சிக்கவேணா.‘’

‘’அடடா அதையெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன் திருவேங்கடம். மனுசன்னா மன்னிக்கத் தெரியுணும். பயப்படாத. உம்பையன நிக்கவய்யி. ஜெயிக்கவைக்கலாம். எம்பையனும் உம்பையனும் ஒண்ணா படிச்சவங்களாமே? எனக்குத் தெரியாது. இவந்தான் சொன்னான். இனிமே அவங்களோட காலம். எதையும் நெனக்காம போய் தேர்தல் வேலையைப்பாரு.‘’ (ப.319)

எதிரியிடம்போய் திருவேங்கடம் நிற்கும்போது நம்மால் அங்கு நிற்க முடியுமா, முடியாதா? முடியும், திருவேங்கடத்துடன் மட்டுமல்ல, சிவலிங்கத்தோடும் நாம் சேர்ந்து நிற்கமுடியும். தீர்வை தீர்மானித்தபடி பிரச்சனைகளை அணுகும்போது வரும் நெருக்கடிகளினால் விரக்தியும், வெறுப்பும், பகையுமே மிஞ்சுகிறது. பிரச்சனைகளை அணுகியவாறு சிந்திக்கும்போது நெருக்கடிகளை புரிந்துகொள்ள முடிகிறது. அடையும் வழியையும் மாற்ற முடிகிறது.

அசுரா

Bookmark the permalink.

Comments are closed.