தலித்தியம் யாழ்ப்பாண சமூகத்திற்கு அவசியம்தானா?

யாழ்ப்பாணம்! மேட்டுக்குடி!! தலித்தியம்!!! என்கிற தலைப்பில் ஜனார்த்தனன் கந்தையா எழுதிய கட்டுரையின் எதிர்வினை.  ஜனார்த்தனின் கட்டுரையை வாசிக்க   இங்கே அழுத்தவும்

தலித்தியம் யாழ்ப்பாண சமூகத்திற்கு அவசியம்தானா?

ஜனார்த்தனனின் கட்டுரையின் ஆரம்பமே புலம்பெயர்ந்த இடங்களில் எழுதிவருகிற எழுத்தாளர்களைப் பற்றித் தொட்டுச் செல்வதால் தொப்பி அளவாகிறது இங்கே. என்னைப் பொறுத்தவரை ‘அழகான உயரமான படித்த உயர் சைவ வேளாள மாப்பிள்ளைக்கு, அதே உயர் சைவ வேளாள குலத்தைச் சேர்ந்த அழகான படித்த பெண் தேவை’ என்கிற பொருள்பட விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பது சரியென்றால் ‘நெடிதுயர்ந்த, திடகாத்திரமான படித்த பள்ளர் குல ஆண் மகனுக்கு, சகல சௌபாக்கியமும் பொருந்திய நிறைவான பறையர் குலப் பெண்மகள் தேவை’ என்பதுமாதிரியான விளம்பரங்களும் வரவேண்டும் என்கிற போராட்டம் மிகவும் சரியே.

தனியே ‘யாழ்ப்பாண மேட்டுக்குடி’ என்றுமட்டும் சுட்டித் தாக்குவதில் ஒரு பிழையிருக்கிறதுதான். அதை முன்பெல்லாம் நானும் செய்திருக்கிறேன். அதற்குரிய வலுவான காரணமும் என்னிடமுண்டு, நண்பன் சுதனின் உபயத்தில். இந்திய சாதீயக் கட்டுமானங்களில் ஓரளவுக்கேனும் சம அந்தஸ்தில் வைத்து நோக்கப்படுகிற சில சாதிகள் உண்டு. யாழ்ப்பாணக்கட்டமைப்பில் எல்லாமே மேலிருந்து கீழாகவே இருக்கிறது. அவனுக்குக் கீழ இவன், இவனுக்குக் கீழ உவன் என்கிற ரீதியில் ஒரு படிக்கட்டுப் போல அமைந்திருக்கிற யாழ்ப்பாண சாதியத்தில் ஒரு சாராரை மட்டும் குத்துவது தவறுதான். இருந்த போதும் குறித்த ‘யாழ்ப்பாண மேட்டுக்குடி’ என்றழைக்கப்படும் உயர்த்தப்பட்ட சாதியினரான வெள்ளாளர்கள் மீது தலித்தியம் பேசுகிறவர்களின் கோபத்துக்கான காரணம் என்னவென்றால், பெருமளவில் பொது இடங்களில் சாதி அடக்குமுறைகளையும் உரிமை மறுப்புகளையும் முன்னின்று செய்தவர்கள், இவர்களே என்பதே. அன்றி, இன்றைக்குக் கனவாக இருக்கிற சமதர்ம சமுதாயம் மலர்கிற போதுகூட யாரும் ‘தட்டாமல் வெளியே போடா, பள்ளா நீயும் தட்டாமல் வெளியே போடா’ என்று கூத்துகளில் கூட ஒதுக்கி ஒதுக்கிப் பாட்டெழுதிய கேவலத்தைச் செய்யப்போவதில்லை. சாதியத்தை எதிர்க்கிற போர்வையில் தனியே ஒரு சமூகத்தைக் கண்மூடித்தனமாக நாங்கள் யாரும் தாக்கவில்லை. வார்த்தைகளால் எங்களுக்கான நியாயங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இன்றை வரை மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டுக் குரலெழுப்புகிறோம். அவ்வளவுதான். எந்த இடத்திலும் ஒரு வெள்ளாளப் பெண்ணின் மேலாடையைக் கொக்கச் சத்தகத்தால் இழுக்கவில்லை. எந்தக் கோவியப் பெண்ணின் மார்பகங்களும் பொதுவெளியில் கசக்கப்பட்டு, அதற்குரிய காரணமாக அவள் மேல்சட்டை அணிந்திருந்தமை சொல்லப்படவில்லை. அப்படிக் கசக்கினோம் என்று எந்தத் தலித்தும் பெருமை பேசவில்லை. இற்றைவரைக்கும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை வைப்பதில் உள்ள வலியையோ, தன் மகன் வயதுப் பையன் ‘எடே’ என்று விளிப்பதையோ, கோவிலுக்கு வெளியே நின்று கும்பிடுகிற வலியையோ, வம்சம் வம்சமாக கொல்லைகளில் போடப்படுகிற பிச்சைக் காசுகளைப் பொறுக்கி சவரம் செய்கிற கொடுமையையோ, காகம் பீய்ச்சிய கோப்பையைக் கழுவித் தண்ணீர் குடிக்கிற அவலத்தையோ எந்த வெள்ளாளனும் அனுபவித்துவிடவில்லை, யுத்தம் கொடுத்த அவலத்தில் கூட.

35 வருடமாக வந்து விழுந்த எந்த ஷெல்லும் சாதிபார்த்து விழவில்லை. ஆனால், சாதி பார்த்து ஷெல்லை விழவைக்க முயன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். எங்கள் கிணத்தில் ஈனப் பிறவிகள் தண்ணீர் குடிப்பதுவோ என்று கழிவு எண்ணையை தங்கள் வீட்டுக் கிணற்றுகளில் ஊற்றிய தர்மவான்களும் அதே போர்தின்ற பூமியில் இருந்தார்கள். கோவில் கிணறுகளில்கூட தண்ணீர் மொள்ள விடாமல் அடித்துக் கலைக்கப்பட்ட அகதிகளின் கதைகள் பேச ரத்தமும் சதையுமாய் இன்றைக்கும் சாட்சிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதற்காக இந்தக் கொடுமைகளைத் தனியே வெள்ளாளர்கள்தான் செய்தார்கள் என்று சொல்லமாட்டேன். வெள்ளாளன் கரையானை அடக்குவான். கரையான் அம்பட்டனை அடக்குவான். இதிலும் கொடுமை அம்பட்டன் பறையனை அடக்குவான். ஏன் தெரியுமா? யாழ்ப்பாணத்தின் படிக்காட்டி சாதிய வரிசையில் ‘தீண்டத்தகாத சாதிகள்’ என்கிற வட்டத்துக்குள் அம்பட்டர்களும், பறையர்களும் அடக்கம். தான் பெறும் துன்பத்தைத் தன்னைப் போலவே துன்புறும் இன்னொருவனுக்குக் கொடுத்த அந்த மனநிலையை என்னென்று சொல்ல? யாரிடம் சொல்லி அழ?

”சாதியின்மையா? சாதிமறைப்பா?” என்கிற பெயரில் காலிங்க டியூடர் சில்வா, பி.பி.சிவப்பிரகாசம் மற்றும் பரம்சோதி தங்கேஸ் ஆகியோர் பதிப்பித்த (தமிழில்: மேனகா வேலாயுதம், பரம்சோதி தங்கேஸ்) ஹோபென் ஹேகன் சர்வதேச தலித் கூட்டொருமைப்பாட்டு வலைப்பின்னல், புதுடில்லி தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் குமரன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண சமூகத்தில் சாதிப் பாகுபாடு” என்கிற தலைப்பில் ஒரு முழு அத்தியாயத்தை பரம்சோதி தங்கேஸ் மற்றும் காலிங்க டியூடர் சில்வா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை நான் முழுவதும் வாசிக்கவில்லை என்றபோதும், யாழ்ப்பாணம் பற்றிய அத்தியாயத்தை இப்பத்தி எழுதும் நோக்கில் முழுமையாக வாசித்தே எழுதுகிறேன் (இப்புத்தகத்தை சிபாரிசு செய்த சுதனுக்கு நன்றிகள்). சாதி பார்த்து விழாத ஷெல்லை சாதி பார்த்து விழ வைக்க பாரிய முயற்சிகள் நடந்தன என்பதற்கு எத்தனையோ சான்றுகளைச் சொல்லலாம். மேற்படி புத்தகம் சாதாரணமானது அல்ல. கற்றறிந்தோர் பலரால் நேரடிக் கள ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அந்தப் புத்தகத்தில் 83ம் பக்கத்தில் இருந்து ‘உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும் சாதி அடிப்படையிலான பாகுபாடும்’ என்கிற பகுதியில் அவர்கள் செய்த கள ஆய்வு ஒன்றின் முடிவுகள் முக்கியமானவை. அந்தப் பகுதியிலிருந்து சில தரவுகள் இங்கே:

  • யுத்த அனர்த்தமும், 2004 சுனாமியும் யாழ்க்குடாநாட்டு மக்களை சாதி வர்க்கம் மற்றும் பால்நிலை அடிப்படையில்லாமல் அனைத்து மக்களையும் பாதித்திருக்கிறது என்ற போதிலும், இவற்றின் விளைவுகள் வேறுபட்ட மக்கள் குழுவினரிடம் வெவ்வேறான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது.
  • இவ்வாறான அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவினர்களோடும், மிகுதிப்பேர் அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அமைத்துக்கொடுத்த முகாம்களிலோ வாழ்ந்து வருகிறார்கள். இப்படி முகாம்களில் வசிப்பவர்கள் வரையறுக்கப்பட்ட வளங்கள், சமூகத் தொடர்புகள் காரணமாக வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் புத்தகம் எழுதப்பட முன் 31-12-2007 க்கு முன்னரான கணிப்பீட்டின்படி மொத்தமாக இவ்வாறான 81 முகாம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தன.
  • அனர்த்தங்கள் அனைத்து மக்களையும் பாதிக்கிற போதிலும், இவ்வாறு முகாம்களில் அல்லலுறுபவர்கள் பெரும்பாலும் பஞ்சமர் எனப்படுகிற தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
  • மயிலிட்டி, காங்கேசன்துறை, ஊறணி மற்றும் வயாவிளான் ஆகிய இடங்களில் இருந்து மல்லாகத்தில் அமைந்திருக்கிற அகதி முகாம்களில் வந்து தங்கியிருக்கிற அகதிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட கற்கையில், அப்படி அகதிமுகாம்களில் தங்கியிருந்தவர்களில் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட சாதிகளாகவே இருந்தனர். யுத்தம் எல்லா மக்களையும் பாரபட்சமின்றிப் பாதித்தது என்றால், மரபு ரீதியாக எண்ணிக்கையில் அதிகமாக இருந்த வெள்ளாளரையும், ஏனைய உயர்த்தப்பட்ட சாதிகளையும் தவிர்த்து காலாகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் நீண்ட கால அடிப்படையில் அகதி முகாம்களில் உழல்வது எங்ஙணம்?

யாழ்ப்பாணத்தில் கொம்யூனிசனம் தனியே அரசடியையும், ஆனைக்கோட்டையையும் சுற்றியே நின்றது என்கிற ஒரு கருத்தாக்கமே மேற்படி மேட்டுக்குடி சிந்தனைதான் என்பதைப் புரிந்துகொள்ளப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நிச்சயமாக சாதி மறுப்பு விடயத்தில் யாழ்க்குடாநாடு முழுவதுமே ஒரு பேரெழுச்சியை உருவாக்கியதில் கொம்யூனிசத்தின் பங்கு அளப்பரியது. பொதுஇடங்களில் இரட்டைக் குவளை முறையை ஒழிப்பது, ஆலயப் பிரவேசம் ஆகியவற்றின் மூலம் சமூக நீதிக்கான முயற்சிகளை முன்னெடுத்ததில் பொதுவுடமைவாதிகள் முன்னின்றார்கள். நிச்சயமாக மக்கள் மத்தியில் கொம்யூனிச சிந்தனைகள் முழுக்க முழுக்க உள்வாங்கப்படாவிட்டாலும், மக்கள் மைய சிந்தனைகளைக் கொண்ட கட்சியாக (கட்சிகளாக) பொதுவுடமைக் கட்சிகள் பெயர்பெற்றன. அந்தச் செல்வாக்கை மீறி தேர்தலில் வெற்றி பெற இரண்டுவிதமான உத்திகள் கையாளப்பட்டன. சமபந்தி போசனம் அறிவித்து விட்டு அமிர்தலிங்கம் தங்கி நின்றது போன்ற, இன்றைக்கு கருணாநிதி போன்றோரால் பெரியளவில் செய்யப்படுகிற அரசியல் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, எங்களை நீங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பாவிட்டால் ‘ப’ ‘ந’ கட்சி எல்லாம் பாராளுமன்றம் போய்விடும் என்று வெளிப்படையாகச் சொல்லி வாக்குக் கேட்டார்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினர். அதாவது, மக்களின் அடிமனதில் தங்கிப்போய்விட்ட சாதி எனப்படும் குட்டையைக் குழப்பி செல்வநாயகம் வழிவந்த இந்த மேட்டுக்குடிகள் மீன் பிடிக்கலாம், ஆனால் எங்கள் உரிமைகளுக்காக இவர்களின் அநியாயங்களை இன்றைய சூழ்நிலையில் வெளிக்கொணர்வது ஆரோக்கியமானது இல்லையாம். என்ன நியாயம் இது? இந்த மேட்டுக்குடி அரசியலின் கொஞ்சம் பண்பட்ட வடிவமே கொம்யூனிசம் அரசடியையும் ஆனைக்கோட்டையையும் சேர்ந்த குழுக்களிடம் மட்டும் புகழ்பெற்றிருந்தது என்கிற கூற்றாகும். செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை விட்டுவிடுவோம். யாழ்ப்பாண நூலகம் 2003ல் திறக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் எதிர்த்ததுக்கான காரணமொன்று பேசாப்பொருளாய்ப் போய்விட்டது. செல்லன் கந்தனின் சாதியைக் காரணம் சொல்லி ஒரு அரசியல் நிகழ்ந்தபோதும் இரு அரசியல் தலைவர்களுக்யேயான ஒரு Ego சண்டையும் அதன் அடிப்படையில் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி உதிர்த்த ‘அவர் வந்து திறக்கிறதெண்டா நான் என்ன சிரைக்கிறதுக்கோ இருக்கிறன்?’ என்ற விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவரை நோக்கிய மகாவாக்கியம் விளையாடிய விளையாட்டு புதைக்கப்பட்டுவிட்டது. அதாகப்பட்டது சாதிப் பெயர் சொல்லி எங்களை நீங்கள் மனோரீதியாக வருத்தியபோது வந்த காயங்கள், நிச்சாமம் போன்ற கிராமங்களில் எங்கள் குடிசைகளை நீங்கள் கொழுத்தியபோது வந்த காயங்கள், ’ப’ ‘ந’ கட்சிகள் என்று முத்திரை குத்தி நாங்கள் பாராளுமன்றம் போனால் தமிழினமே அழிந்து போகும் என்பது போல் பிரச்சாரம் செய்து தந்த காயங்கள், ஏன் இன்றைக்குக் கூட ஈழமக்கள் ஜனநாயக முன்னணிக்கு யாழ்ப்பாணத்தில் பொதுவாக விளங்கிவரும் ‘மற்றப் பார்ட்டியளின்ர கட்சி’ போன்ற கொச்சைப்படுத்தல்கள் தந்த காயங்கள் இவை எல்லாவற்றையும் விட ‘உயர்த்தப்பட்ட சாதி வெள்ளாளர்கள் எங்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்’ என்று நாங்கள் சொல்வது வன்கொடுமையாகப்பட்டால், மன்னித்துவிடுங்கள், இதே கோஷத்தை இன்னும் பெரிதாகப் போடுவதுதவிர எங்களுக்கு வழியேதுமில்லை.

’சாதிப் பெயர்களை வெளியே சொல்லுதல் மீண்டும் சாதிகளை வளர்ப்பதாகும்’ என்கிற வாதம் பலதரப்புகளில் முன்வைக்கப்படுகிறது. புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பொதுவுடமைவாதியான சி,க, செந்தில்வேல் சமீபத்தில் கனடாவில் சில கூட்டங்களில் இந்தக் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார். ஓரளவுக்கு இந்தக் கோரிக்கை சரியானதாக இருப்பதாகத் தென்பட்டாலும், இந்தக் கோரிக்கையின் படுதோல்வியை செந்தில்வேல் சொன்ன ஒரு சின்ன அனுபவப் பகிர்வு எடுத்துக்காட்டியது. யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிகவும் முன்னுக்கு நின்ற நிச்சாமம் கிராமத்தில் பிறந்து சுவிசில் வசிக்கிற தலித் ஒருவரின் மகன் தன்னுடைய திருமணப் பத்திரிகையில் ’நிச்சாமம்’ என்கிற பெயரைத் தவிர்க்கச் சொல்லிக் கேட்டாராம். ஏனென்றால் அது அவருடைய சாதி அடையாளத்தைக் காட்டிவிடுமாம். இதை செந்தில்வேல் அவர்கள் சமூகமேநிலையாக்கத்தின் ஒரு கூறாகப் பார்க்கிறார். ஆனால், சாதிகளை வெளியே கூறாமல் ஒளித்து வைத்து ஒழிக்கலாம் என்கிற அவரது கருத்து மோசமாக அடிபட்டுப்போகிறது. அந்தக் கருத்தியலோடு நடந்த போராட்டத்தில் சமூகமேநிலையாக்கம் ஓரளவுக்கு நடந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய தன்னிலை மேநிலையாக்கம் (Self-empowerment) என்பது நடைபெறவேயில்லை. பொருளாதார ரீதியாக முன்னேறியபோதும், தலித் என்று அடையாளம் காணப்பட்டால் என்னை கீழ்மைப்படுத்துவார்கள் என்கிற அந்தப் பயத்தை சாதிப்பெயர்களை ஒளித்து வைத்தவர்களால் போக்கமுடியவில்லை. இன்றைக்கு திசைமாறிப் போய்விட்டாலும்கூட ‘அடங்கமறு அத்துமீறு’ என்ற கோசத்தோடு அரசியல் செய்யவந்த திருமாவளவன் போன்றோரின் ஆரம்பகாலச் செயற்பாடுகளில் ஒரு sustainability இருந்திருந்தால் இந்தப் போராட்டங்கள் வேறொரு வடிவம் பெற்றிருக்கும். ‘நான் ஒரு வெள்ளாளன்’ என்று எப்படி ஒரு வெள்ளாள சமூகத்தவரால் சொல்ல முடிகிறதோ, ‘உயர் சைவ வேளாளர்’ என்று அந்தியோட்டி நினைவு மலர்களில் எப்படி அச்சடிக்க முடிகிறதோ அப்படி பள்ளனும் பறையனும் நளவனும் வெளிச்சொல்லவும், அச்சடிக்கவும் எங்களை நாங்களே தன்னிலை மேநிலையாக்கம் செய்துகொள்வதில் என்ன பிழை இருக்கமுடியும்?

அடுத்தது பல இடங்களில் சொல்லப்படுகிற கலப்புத் திருமணம் மூலமான சாதி ஒழிப்பு. ’இதை எந்த மட்டத்தில் இருந்து புரிந்து கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்ன சாதி, நான் வேறோர் சாதியில் பெண்ணெடுத்தேன். அந்த சாதி என்னுடைய சாதியிலும் குறைவானது. ஆகவே நான் சாதி மறுப்பாளன்’ என்று எவன் சொன்னாலும் செருப்பாலடி. அது சாதிமறுப்புத் திருமணம் அல்ல, சாதி வளர்ப்புத் திருமணம். சேர்கிற இருவரும் தாம் என்ன சாதி என்ற பிரக்ஞையே இல்லாமல் சேரவேண்டும் என்றால் ஒரே வழி, மேலே நான் சொன்ன தன்நிலை மேநிலையாக்கம் மட்டுமே தீர்வு. அதற்கு நாங்கள் எங்கள் சாதிப் பெயர்களை வெளியே சொல்லியாகவேண்டியிருக்கிறது. ’உங்களுக்கு எந்த வகையிலும் நாங்கள் குறைந்துபோய்விடவில்லை’ என்று உயர்த்தப்பட்ட சாதியினருக்கு அறைகூவல் விடவேண்டி இருக்கிறது. அப்படியாக சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்கிற நிலைக்கு வரவேண்டியிருக்கிறது. அதன்பின்னர் ‘கலப்புத் திருமணம்’ என்கிற கொச்சையான வார்த்தைப் பிரயோகங்கள் இல்லாமல் இருமனங்கள் இணைகிற திருமணங்கள் எங்கள் சமூகங்களில் நடக்கும். இதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை. ‘நான் உயர்த்தப்பட்ட சாதியினன். நான் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்’ என்றோ, ‘நான் என்னிலும் தாழ்த்தப்பட்ட சாதியில்தான் திருமணம்’ செய்வேன் என்று சொல்வதெல்லாம் ஆபாசத்தின் மிக உச்சம்.

வளர்ந்து வரும் சந்ததிகள் ‘சாதி என்றால் என்ன?’ என்று கேட்கிறார்களாம். கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. என்னையும் யாரும் சாதி சொல்லி வளர்க்கவில்லை. ஆனால் பசி போல, நித்திரை போல எம்முள் ஊறிவிட்டிருக்கிற சாதியக்கூறுகளை ஒளித்து வைத்துவிட்டு, இங்கே இப்போ சாதி இல்லை என்று சொல்வது போல அயோக்கியத்தனம் ஏதுமில்லை. சற்றே உற்றுப் பார்த்தால், சத்தமே இல்லாமல் சாதிச் சாத்தான் தன்னுடைய விளையாட்டுகளைச் செய்துகொண்டிருக்கும். ’எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் நிலம் ஒன்று விலை போகிறது. அதை நாங்கள் வாங்காவிட்டால் மற்றதுகள் வாங்கீடுங்கள்’ என்று சொல்லி வெளிநாட்டில் சகோதரங்களின் கடனட்டைக் காசில் அவசர அவசரமாக ஒரு நிலத்தை வாங்கிப்போட்ட அந்த இளைஞிக்கும் எனக்கும் 3 வயதுதான் வித்தியாசம். ‘எனக்கு சுத்திவர விளையாட ஒருதரும் இல்லை. அதால அம்மம்மா வீட்டைதான் விளையாடப் போறனான்’ என்று சொல்கிற மழலை ஒன்றிடம், ‘ஏனம்மா, உங்கட வீட்டுக்குப் பக்கத்தில சின்னப்பிள்ளையள் இல்லையோ?’ என்று கேட்டால் அந்தப் பிள்ளை சொல்கிறது ‘அவையள் மற்றப் பார்ட்டியள்’ என்று. அந்தப் பிள்ளை பிறந்தது 2005ம் வருடம். இந்தக் கேள்வியை நான் கேட்டது இந்த வருடம். ‘குழலினிது யாழினிது’ எல்லாம் தாண்டி ஒரு மழலை வாயில் இந்தச் சொல்லைக் கேட்டதுக்கு காதில் ஈயம் ஊற்றியிருந்தால்கூட சந்தோசமாக இருக்கும். அதைவிடுங்கள் அய்யா, பேரழிவிலிருந்து தப்பி வந்த வன்னிமக்களில் ஒரு சாரார், ‘அகதி முகாமில மற்றதுகளோட இருந்ததுக்குக் குண்டு விழுந்து செத்துப் போயிருக்கலாம்’ என்று புலம்புவதை காதால் கேட்டேன் அய்யா. அதற்கான நியாயங்களை நாங்கள் எங்கிருந்து கற்பிப்பது?

இன்றைக்கு நல்லூர்க் கந்தனிற்கு நடப்பது முழுக்க முழுக்க பக்தி சம்பத்தப்பட்ட சேவைகள் என்று யாராவது மனச்சாட்சியோடு சொல்லமுடியுமா? நல்லூர்க்கந்தனைக் காண எல்லோரும் அனுமதிக்கப்படுவது வெளிநாட்டுக் காசு செய்த அற்புதமே ஒழிய, அங்கே அடிப்படையில் இருந்த சாதிக்கட்டமைப்புகள் ஒழிக்கப்படவில்லை. மாறாக ஒளிக்கப்பட்டிருக்கின்றன, எல்லையில்லா செலவளிக்கும் திறண்களால். இதையெல்லாம் சமூக மறுமலர்ச்சி என்று பேசுதல் அறியாமை அன்றி வேறில்லை என்பது என்னுடைய கருத்து. அய்யா, ஊர்ச்சங்க ஒன்றுகூடல் என்று சொல்லி புலம்பெயர்ந்த தேசங்களில் புஷ்டியாக வளர்க்கப்படுகிறது சாதி. ஊர்ச்சங்க ஒன்றுகூடல்களுக்கு முன்னர் அற்புதமான ஒரு அறிவிப்புச் செய்வார்கள். ‘பங்குபற்றுபவர்கள் உணவுகளும் கொண்டு வாருங்கள்’ என்று. இது செலவைக் குறைக்கும் கூட்டு முயற்சி என்று பச்சைப் பொய் சொல்லவிடமாட்டோம். ‘அவரவர் தங்கள் குழுக்களோடு சேர்ந்துண்ணுங்கள்’ என்கிற தந்திரோபாயமான சாதி வளர்ப்பே இது.

’சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடிய அதே பாரதி, புதுமைகளைத் தேடித்தேடிப் புகுத்தாவிட்டால் ‘மெல்லத்தமிழினிச் சாகும்’ என்று முழங்கிய அதே பாரதி உதிர்த்த சில முத்துக்களும் உள.
”ஈனப் பறையர்களேனும்  அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ
சீனத்த ராய்விடு வாரோ- பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைடப்பாரோ” என்ற பாடல் உதாரணத்துக்கு ஒரு முத்து.
‘வேட்டையாடி வாழ்ந்த என் முப்பாட்டன் காலத்து மூத்த எங்கள் பண்பாடுகளின் வாத்தியமான பறையை வாசிப்பவன், பறையன். தீண்டத்தகாதவன். அடியேது முடியேது தெரியாமல் தலையை ஆட்டி ரசிக்கிற கர்நாடக சங்கீதத்தின் வெறும் பக்க வாத்தியமான மிருதங்கம் வாசிப்பவன் கலைஞன். தனிமனித சாமிகள் புனிதர்கள், பெண்களைத் தீண்டத்தக்கவர்கள். இப்படியே எங்களை ஒதுக்கி ஒதுக்கி நீங்கள் செய்ததைவிட, யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி வெள்ளாள சமூகம் எங்களுக்கு செய்த அக்கிரமங்களை உலகறியச் செய்வது அராஜகம் என்று கருதினால், ‘கடைசிப் பறையன் இருக்கும் வரைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் எங்களின் போர்ப்பறை’.

நன்றி:

  • காலிங்க டியூடர் சில்வா, பி.பி. சிவப்பிரகாசம், பரம்சோதி தங்கேஸ்; ”யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண சமூகத்தில் சாதிப்பாகுபாடு” சாதியின்மையா?சாதிமறைப்பா? இலங்கையில் மறைந்து காணப்படும் சாதிப்பாகுபாடு, சமூகவிலக்கு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் இயங்குநிலைகள் ; ப.ப. 65-99; சர்வதேச தலித் கூட்டொருமைப்பாட்டு வலைப்பின்னல், ஹோபன் ஹேயன் & தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனம், புது டில்லி; குமரன் பதிப்பகம்; 2009; http://noolaham.net/project/39/3856/3856.pdf
  • சுதன், மே.ப. புத்தகத்தை சிபார்சு செய்தமைக்கும், மேலதிக தகவல்களுக்கும்.
நன்றி:  இன்னாத கூறல் (  www.kiruthikan.com)
Bookmark the permalink.

Comments are closed.